(இ - ள்.) ஐய மயிரையுடைய திரண்ட முன்கையினையும் தூய ஆபரணத்தையுமுடைய பேதைமகளிர் வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்த பாவைக்கு வளைந்த கோட்டுப்பூவைப் பறித்துக் குளிர்ந்த ஆன் பொருந்தத்து நீரின்கட் பாய்ந்து விளையாடும் வானைமுட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூரின்கட் பாடுதற்கமைந்த வெற்றியையுடைய அரசனும், பகைதொறும் வெம்மையையுடைய அரணை அழித்துவலியோடு எதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; அப்புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப் பொலிவுடைய சிறந்த பலகழஞ்சாற் செய்யப்பட்ட நன்மையையுடைய அணிகலத்தைப் பெற்றாள்; அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்கு முதற்றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணனும், விளங்கிய தழலின்கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய வெள்ளிநாராற் றொடுத்த பூவைப் பெற்றான் - எ - று. |