பெரும! மைந்தினோய்! பாழ்செய்தனை; தேர் வழங்கினை; கயம் படியினை; ஆகலின், நினக்கு ஒன்னாராகிய வசைபடவாழ்ந்தோர் பலர் கொல்? யூபம் நட்ட வியன்களம் பலகொல்? இவற்றுள், யா பல கொல்லோ எனக்கூட்டி வினைமுடிவுசெய்க. விளங்கு பொன்னெறிந்த (12) என்பதற்கு கண்ணாடி தைத்த எனினும் அமையும். தார் முன்பு தலைக்கொண்மார் (14) என்பதற்குத் தாரை வலியால் தலைப்படவெனினும் அமையும். புரையுநற்பனுவல் (16 - 7) என்பதூஉம் பாடம். யா பலவென இவ்விரண்டின் பெருமையும் கூறியவாறு. இவை எப்பொழுதுஞ் செய்தல் இயல்பெனக் கூறினமையின், இஃதுஇயன்மொழியாயிற்று.
(16) வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச்செக்கரிற் றோன்றப
புலங்கெட விறுக்கும் வரம்பிறானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெருமநின்களிறே.
திணை |