புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   817
Zoom In NormalZoom Out

இதழ்கள்    நெகிழ்ந்த   ஆம்பலினது  அகன்ற  இலையதனாலே
மதுவையுண்டு  தெளிந்த  கடலினது ஒலிக்குந்திரையின் இனிய சீராகிய
தாளத்தேயாடும்  மென்புலத்தூர்களையுடையநல்ல நாட்டுக்கு வேந்தே!
பல   பழத்தையும்   நச்சித்  தாம்  வாழ்தற்கிடமாகிய  ஆகாயத்தின்
கண்ணே  உயரப்பறந்து  பெரிய  மலையின்முழை எதிரொலி முழங்கச்
சென்று   அவ்விடத்துப்   பழமுடைய  பெரியமரம்  பழுத்துமாறிற்றாக
வருந்திப்   பழம்   பெறாதே   மீளும்  புள்ளினத்தையொப்ப  நினது
நச்சப்படுந்தன்மை  கொடுவர  வந்து  நின்புகழைக்  கூறும் பரிசிலேன்
யான்வறியேனாய் மீளக்கடவேனோ? வாட்போரின்கண் மேம்படுவோய்?
நீ  ஒன்றை  ஈத்திலையாயினும்  யான்  அதற்கு வருந்துவேனல்லேன்;
அது  நிற்க,  நோயின்றியிருப்பாயாக;  பெரும!  நம்மிடத்து உளதாகிய
அணிய   அணுமையைக்  காண்பதாக,  நாடோறும்  நறிய  பலவாகிய
தழைத்த    மயிரையும்   தேன்போலுஞ்   சொல்லையும்   ஆராய்ந்த
ஆபரணத்தினையும்  உடைய  மகளிர்  ஒருவரினொருவர் புணர்தற்குக்
காலம்பார்க்கும்     பெரிய     மலைபோலும்     மார்பினையுடைய
போரைவிரும்பும்    சேயையொப்பாய்!   நினது   மகிழ்ச்சியையுடைய
நாளோலக்கம்-எ - று.
 

பாணிபார்க்கும் மார்பு - பாணி பார்த்தற்கு ஏதுவாகிய மார்பு.
 

நம்முட்  குறுநணி   காண்குவதாகவென்றது,  நீ என்மாட்டுச் செய்த
அன்பின்மையை அவ்விருக்கையன்றிப் பிறரறியாதொழிவாராகவென்னும்
நினைவிற்று.
 

பொருந!  வாண்மேம்படுந!   சேஎய்!  நின்  இசைநுவல்பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ? நீ ஈயாயாயினும் இரங்குவேனல்லேன்; பெரும!
நோயிலையாகுமதி; நம்முட் குறுநணியை நின் இருக்கை காண்குவதாக;