(இ - ள்.) உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின், எம்முடைய இறைவன் களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை ஆமையிறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர் உண்டு ஆரன்மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தேயடக்கி மதுவுண்ட மயக்கத்தால் வைகுந்தொழிலொழியும் நீங்காத விழவினையுடைய புது வருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும் பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய் உறையூரென்னும் படைவீட்டிடத்திருந்தான், கோப்பெருஞ்சோழன்; புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி மெய்ம்மையார்ந்த மிக்கமகிழ்ச்சியை நாடோறும் மகிழ்ந்து-எ - று. நன்னாட்டுள்ளுமென்ற உம்மை சிறப்பும்மை. |