முயற்சியையுடைய வெண்கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும் வென்றியையுடைய வேந்தே! கிளர்ந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட இப்பரந்தவிடத்தையுடைய உலகத்தின்கண் நின்னிடத்துப் போர்செய்யவந்த இருவரையும் கருதின், பழையதாய்த் தங்கப்பட்ட வலியை யுடைய நின் பகைவேந்தராகிய சேரபாண்டியருமல்லர், போரின்கண் விரும்பிய காட்சியுடனே நின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்தாம்; நினையுங்காலத்து நீயும் அவர்க்கு அத்தன்மையையாகிய பகைவனல்லை; பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ! நீ பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தித் தேவருலகத்தின்கட் போய்ப் பின்பு நீ ஒழித்த அரசாட்சியுரிமை அவர்க்குரித்து; ஆதலால், அப்பெற்றித்தாதலும் அறிவோய்! பெரிதும் இன்னமும் கேட்பாயாக; புகழை விரும்புவோய்; நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடையநின்புதல்வர் தோற்பின் நினது பெரிய செல்வத்தை அவர்க்கொழிய யாவர்க்குக் கொடுப்பை? போரை விரும்பிய செல்வ! நீஅவர்க்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர் உவப்பப் பழியை உலகத்தே நிறுத்துவை; ஆதலான், ஒழிவதாக நின்னுடைய மறன்; கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக; நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அஞ்சினோர்க்கு அரணாகும் நினதடிநிழல் மயங்காமற் செய்தல் வேண்டும், |