ஐயப்பாடு நீங்கார் அழுக்குச்செறிந்த காட்சிநீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்; யானை வேட்டைக்குப் போவோன் யானையையும் எளிதாகப்பெறுவன்; குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாதுவறிய கையினனாயும் வருவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும்; அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப்பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்; மாறிப்பிறவாரென்று சொல்லுவாருளராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது புகழைநிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும் நல்வினைசெய்தல் அழகிது-எ - று. |