ஊட்டிய வசையற்ற வலியையுடைய கொலைத்தொழிலுக்கு நின்னையொத்த பொன்னானியன்ற பேரணிகலத்தையுடைய வளவனென்று சொல்லப்படும் வண்டுகள் மொய்க்கப்படும் கண்ணியையுடைய இத்தன்மையினையுடையோனை நீ கொண்டாயாயின், இனி நின்பசியைக் கெடுப்போர் யார்; சொல்லுவாயாக-எ-று. கூற்றமே! இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத் தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்தட்டுண்டனை; நன்வாயாகுதல் இன்னுங் காண்குவையெனக் கூட்டி வினை முடிவுசெய்க. நயன் - நியாயமுமாம்.
(228) கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
இருடிணிந் தன்ன குரூஉத்திரட் பரூஉப்புகை
அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
அளியை நீயே யாங்கா குவைகொல்
நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை
விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவ ருலக மெய்தின னாதலின்
அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி
வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம்
இருநிலந் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே.திணை - அது; துறை -ஆனந்தப்பையுள். (பொதுவியல்) அவனை ஐயூர் முடவனார் பாடியது. ஆனந்தப்பையுளாவது:- “விழுமங் கூர |