பருகி நிறைவை, அவன் போரிற் பகைவரைக் கொல்லும் களத்தின்கண்-எ - று. மன் :கழிவின்கண் வந்தது. உயிர் உண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல், “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி” (பெரும்பாண். 1 - 2) என்றாற்போல ஓரணி குறித்து நின்றது. எழினி களஞ்சேர ஒருவனாருயிர் உண்ணாயாயின் அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகி ஆர்குவை; அதுகழிந்ததேயெனக் கூட்டி வினைமுடிவு செய்க. ‘கடும்பசி கலங்கிய’ என்றும் பாடம். (531)
எறிபுனக் குறவன் குறைய லன்ன
கரிபுற விறகி னீம வொள்ளழற்
குறுகினுங் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினு நீள்க பசுங்கதிர்த்
திங்க ளன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது. (இ - ள்.) வெட்டிச்சுட்ட கொல்லைநிலத்துக் குறவனால் தறிக்கப்பட்ட துண்டம் போன்ற கரிந்த புறத்தையுடைய விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய அழலின்கண் உடல் சுடச் சென்று அணுகினும் அணுகுக; அவ்வாறு அணுகாதுபோய் வறிதே ஆகாயத்தையுற ஓங்கினும் ஓங்குக; குளிர்ந்த சுடரையுடைய மதி போலும் வெண்கொற்றக் குடையையுடைய ஒள்ளிய ஞாயிற்றையொப்போனது புகழ்மாயா-எ - று. ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. இனி ஈமவொள்ளழல் இவனுடல் சிதையாமற் சிறுகினுஞ் சிறுகுக; அன்றிச் சிதையும்படி சென்று நீளினும் நீளுக; இவன் புகழ் மாயாவெனினும் அமையும். ‘எரிபுனக் குறவன்’ என்று பாடமோதுவாரும் உளர். (232)
இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழு நாளே
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத்
|