போரின்கட் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண் வேல் தைத்த சிறந்தபுண் பலவென வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை-எ - று. பெரும்பூண் மார்பென இயையும். திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை. பொன் : ஈண்டு இரும்பு. அடுக்கு விரைவின்கண் வந்தது. இயம்பிய குரல் பொய்யாகியரெனக்கூட்டுக. (234) நோகோ யானே தேய்கமா காலை பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டன் மரீஇ யோனே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவனை அவர் பாடியது. (அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது). (இ - ள்.) நோவக்கடவேனோ யான்? எனது வாழக்கடவ மிக்க நாள் மாய்வதாக; பிடியினது அடிபோன்ற சிறிய இடத்தினை மெழுகித் தன்னை மேவப்பட்ட காதலி புன்மேல் வைக்கப்பட்ட இனிய சிறிய பிண்டத்தை எவ்வாறு உண்டான்கொல்லோ? உலகத்தார் யாவரும் புகும்பரிசு திறந்த வாயிலையுடைய பலரோடுங் கூடி உண்டலை மருவியோன்-எ - று. இன்சிறு பிண்டமென்றது இகழ்ச்சிக் குறிப்பு. பலரோடுண்டலை மரீஇயோன் பிண்டம் யாங்கு உண்டனன் கொலெனக் கூட்டுக. (235) சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு |