கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந்
தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டும்
கையுள போலுங் கடிதண் மையவே
முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தந் துடிபுணை யாக
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையெயிற் றுய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த வுரைய னாகி
உரிகளை யரவ மானத் தானே
அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே
கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய விலக்கம் போல
அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே
உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே. திணை - அது; துறை - கையறுநிலை; பாண்பாட்டுமாம் (கரந்தை) ...........................................வடமோதங்கிழார் பாடியது. (இ - ள்.) ஓசைமிகவேண்டுமென்று எறியினும் ஓசையை உள்வாங்கி வேறுபட்டு இரங்கற்பண்ணாகிய விளரியைச் சென்று உறுகின்ற இனிய நரப்புத்தொடையினது தீங்கை நினைந்து நடுங்கும் நெஞ்சத்தைத் தலைப்பட்டுப் புறப்பட்டவளவின் நிமித்தவழியாக ஒரு மனைவி விரித்துவருகின்ற மயிரைப்பார்த்துக் களர்நிலத்துள்ள கள்ளிமரத்தின் நிழற்கண் உண்டாகிய தெய்வத்தை ஏத்திப் பசிதங்கிய வயிற்றையுடையையாய் இரங்கிக் கையாற்றொழுது நம் குருசிலைக் காண மாட்டேன் கொல்லோவென்று எதிர் வருவாரைப் பார்த்துக் கேட்டு |