புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   856
Zoom In NormalZoom Out

பந்தர்க்கீழ் நட்ட கன்மேலது-எ - று. 

சூட்டியென்பது, சூட்டவெனத் திரிக்கப்பட்டது;  சூட்டப்பட்டெனினும்
அமையும். 

‘மனையோள்  கூந்தனோக்கி’  என்பதற்கு, ‘பாண! என் மனைவியது
சரியும் மயிரை நோக்கி’ எனவும், ‘புரவுத்தொடுத்து’ என்பதற்கு ‘அன்று
உம்மைப் புரந்த பரிசைப் பாடி’ எனவும் உரைப்பாரும் உளர். 

(261) அந்தோ வெந்தை யடையாப் பேரில்
வண்டுபடு நறவிற் றண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றும்
வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
கண்டனென் மன்ற சோர்கவென் கண்ணே
வையங் காவலர் வளங்கெழு திருநகர்
மையல் யானை யயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூ னோசை
புதுக்கண் மாக்கள் செதுக்க ணாரப்
பயந்தனை மன்னான் முன்னே யினியே
பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி
நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
விரகறி யாளர் மரபிற் சூட்ட
நிறையிவட் டந்து நடுக லாகிய
வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போலப்
புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே. 

திணையும் துறையும் அவை. (கரந்தை, கையறுநிலை)

.................ஆவூர் மூலங்கிழார் பாடியது.

(இ - ள்.) அந்தோ!  என்  இறைவனது அடையாத பெரிய இல்லே!
வண்டுகள்  படியும்  மதுவினால் ஒழியாத மண்டையுடனே யாவர்க்கும்
வரையாமல்  வழங்கும் மிக்க சோற்றையுடைய முரிந்த குறட்டையுடைத்
தாகிய     முற்றம்    நீரற்ற    யாற்றின்    ஓடம்    எத்தன்மைத்து
அத்தன்மைத்தாகக் கண்டேன்,