புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   865
Zoom In NormalZoom Out

கண்டு,   சேரமான்   அந்துவஞ்   சேரல்   இரும்பொறையோடு
வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடியது.
 
14
 
கடுங் கண்ண கொல் களிற்றால்
காப்பு உடைய எழு முருக்கி,
பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து, சமம் தாங்கவும்;
பார் உடைத்த குண்டு அகழி
நீர் அழுவ நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச்
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை
புலவு நாற்றத்த பைந் தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது,
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய - பெரும! - தாமே. நல்லவர்க்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை,
செரு மிகு சேஎய்! - நிற் பாடுநர் கையே.
 
 
திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை)
 
சேரமான்   செல்வக்கடுங்கோ   வாழியாதன்  கபிலர்  கைப்பற்றி,
மெல்லியவாமால் நூம் கை என, கபிலர் பாடியது.
 
15
 
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து
துளங்கு இயலான், பணை எருத்தின்,
பாவு அடியான், செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப்பு உடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார்
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார்,
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல்
நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? - பெரும! வார் உற்று