புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   880
Zoom In NormalZoom Out

43...
 
கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள, கொடுஞ்சிறைக்
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ,
தன் அகம் புக்க குறு நடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடு மான்
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்:
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்-
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை)
 
சோழன்  நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும்
வட்டுப்  பொருவுழி,  கை  கரப்ப,  வெகுண்டு  வட்டுக் கொண்டு
எறிந்தானை,  'சோழன்  மகன்  அல்லை, என நாணியிருந்தானைத்
தாமப்பல் கண்ணனார் பாடியது.
 
44
 
இரும்பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து,
அலமரல் யானை உரும் என முழங்கவும்,
பால் இல் குழவி அலறவும், மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்!
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்;
மறவை ஆயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லையாக,
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின்
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே.
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை)
 
அவன்   ஆவூர்   முற்றியிருந்த   காலத்து  அடைத்து  இருந்த
நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 
45
 
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்;
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;