புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   887
Zoom In NormalZoom Out

59...
 
நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை, எம்மனோர்க்கே.
 
 
திணை அது; துறை: பூவைநிலை. (பாடாண் திணை)
 
பாண்டியன்  சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல
வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
 
60
 
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து,
தொழுதனெம் அல்லமோ, பலவே - கானற்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன்,
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்,
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே?
 
 
திணை அது; துறை: குடைமங்கலம். (பாடாண் திணை)
 
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர்
மருத்துவன் தாமோதரனார் பாடியது.
 
61
 
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளைப் பரூஉக் கண் துணியல்
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக,
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து
செழுங்கோட் பெண்ணைப் பழம் தொட முயலும்,
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன்,
எஃகு விளங்கு தடக்கை இயல் தேர்ச் சென்னி,
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்,
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே.
 
 
திணை வாகை; துறை: அரசவாகை.
 
சோழன்   இலவந்திகைப்  பள்ளித்  துஞ்சிய  நலங்கிள்ளி  சேட்
சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
பாடியது.