| 76... உழிஞைப் பவரொடு மிடைந்து, செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி, பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக, நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடி, 'பொருதும்' என்று தன்தலை வந்த புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே. திணை: வாகை; துறை: அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது. 77 கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி, நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் யார் கொல்? வாழ்க, அவன் கண்ணி, தார் பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே; வயின் வயின் உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ, கவிழ்ந்து நிலம் சேர அட்டதை மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே. திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை அவர் பாடியது. (பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடக்குன்றூர் கிழார் பாடியது). 78 வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து, அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து, 'விழுமியம், பெரியம், யாமே; நம்மின் பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என, எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர, ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர் மாண் இழை மகளிர் நாணினர் கழிய, தந்தை தம் ஊர் ஆங்கண், தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே. திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை அவர் பாடியது. (பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது). 79 மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து, தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி, வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே; எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே. திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை அவர் பாடியது. (பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது). |