| 80 இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், மைந்துடை மல்லன் மதவலி முருக்கி, ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒருகால் வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே; நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம - பசித்துப் பணை முயலும் யானை போல, இரு தலை ஒசிய எற்றி, களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. திணை: தும்பை; துறை: எருமை மறம். சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது. 81 ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; யார்கொல் அளியர் தாமே - ஆர் நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவி கை மள்ளன் கைப்பட்டோரே திணை: வாகை; துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது. (சோழன் போர்கைகோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தலையார் பாடியது.) 82 சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்றுமாதோ - ஊர் கொள வந்த பொருநனொடு, ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே! திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) அவனை அவர் பாடியது. (சோழன் போர்கைகோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தலையார் பாடியது.) 83 அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என் தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே; அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; என் போல் பெரு விதுப்புறுக - என்றும் ஒரு பாற் படாஅதாகி, இரு பாற் பட்ட இம் மையல் ஊரே! திணை: கைக்கிளை; துறை: பழிச்சுதல். அவனைப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது. (சோழன் போர்கைகோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப்) 84 என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே; யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே; போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே, கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண், ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு உமணர் வெரூஉம் துறையன்னன்னே. திணையும் துறையும் அவை. (கைக்கிளை, பழிச்சுதல்) |