புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   900
Zoom In NormalZoom Out

கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
 
100
 
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.
 
 
திணையும்   துறையும்   அவை;   திணை:   வஞ்சியும்,  துறை :
கொற்றவள்ளையும் ஆம். (வாகை, அரசவாகை)
 
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
 
101
 
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ -
இழை அணி யானை இயல்தேர் அஞ்சி
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது; அது பொய் ஆகாதே;
அருந்த ஏமாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!
 
 
திணை: பாடாண்திணை; துறை: பரிசில் கடாநிலை.
 
அவனை   அவர்   பாடியது.   (அதியமான்   நெடுமானஞ்சியை
ஒளவையார் பாடியது)
 
102
 
'எருதே இளைய; நுகம் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்?' என உமணர்
கீழ்மரத்து யாத்த சேம அச்சு அன்ன,
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?
 
 
திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை)
 
அவன்  மகன்  பொகுட்டெழினியை  அவர் பாடியது. (அதியமான்
நெடுமான்  அஞ்சியின்  மகன்  பொகுட்டெழினியை  ஒளவையார்
பாடியது.)
 
103
 
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி,
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச்
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி!
செல்வை ஆயின், சேணோன் அல்லன்;
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப் புலத்