புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   905
Zoom In NormalZoom Out

122
 
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என,
ஏத்தினர் தரூஉம் கூழே, நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே;
வடமீன் புரையும் கற்பின், மடமொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
நினது என இலை நீ பெருமிதத்தையே.
 
 
திணை: பாடாண்திணை; துறை: இயன்மொழி.
 
அவனை அவர் பாடியது. (மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர்
பாடியது).
 
123
 
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல்இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அவனை அவர் பாடியது. (மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர்
பாடியது).
 
124
 
நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
வறிது பெயர்குநர் அல்லர் - நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடியோரே.
 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அவனை அவர் பாடியது. (மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது).
 
125
 
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே,
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழ் இருக்கையே
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே;
குன்றத்து அன்ன களிறு பெயர,
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே
'வெலீஇயோன் இவன்' என,
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்,
நல் அமர் கடத்தல் எளிது மன், நமக்கு' எனத்
தோற்றோன் தானும், நிற் கூறும்மே,
'தொலைஇயோன் இவன்' என,
ஒரு நீ ஆயினை - பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே.
 
 
திணை: வாகை; துறை: அரசவாகை.
 
சேரமான்  மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம்
வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய