புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   907
Zoom In NormalZoom Out

128... கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் -
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே. 
 

திணை   அது;   துறை:    வாழ்த்து;   இயன்மொழியும்   ஆம்.
(பாடாண்திணை)
 
அவனை   அவர்   பாடியது. (ஆயை   உறையூர்   ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது). 

129 குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் -
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் -
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின் பிழையாது மன்னே. 
 

திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை)
 
அவனை   அவர்   பாடியது.   (ஆயை   உறையூர்  ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது). 

130 விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு,
இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே! 
 

திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அவனை   அவர்   பாடியது.   (ஆயை  உறையூர்  ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது). 

131 மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடினகொல்லோ -
களிறு மிக உடைய இக்கவின் பெறு காடே? 
 

திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அவனை   அவர்   பாடியது.   (ஆயை   உறையூர்  ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது). 

132 முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! -
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. 
 

திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி)
 
அவனை   அவர்   பாடியது.   (ஆயை   உறையூர்  ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது).