புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   909
Zoom In NormalZoom Out

136...
 
தெண் நீரின் கண் மல்கி,
கசிவுற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ?
அன்ன தன்மையும் அறிந்தீயார்,
'நின்னது தா' என, நிலை தளர,
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ?
'ஆ அங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'
எனக் கருதி பெயர் ஏத்தி,
வாய் ஆர நின் இசை நம்பி,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என,
அனைத்து உரைத்தனன் யான் ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை
நுண் பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.
 
 
திணை அது; துறை: பரிசில் கடாநிலை. (பாடாண்திணை)
 
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது. (ஆயைத்)
 
137
 
இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே - துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
பொன் அன்ன வீ சுமந்து,
மணி அன்ன நீர் கடற் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
நீ வாழியர்! நின் தந்தை
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!
 
  
திணை அது; துறை: இயன்மொழி; பரிசில் துறையும் ஆம். (பாடாண்திணை)
 
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
 
138
 
ஆனினம் கலித்த அதர் பல கடந்து,
மானினம் கலித்த மலை பின் ஒழிய,
மீனினம் கலித்த துறை பல நீத்தி,
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை,
'மாறி வா' என மொழியலன்மாதோ;
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே?
 
 
திணை அது; துறை: பாணாற்றுப்படை. (பாடாண்திணை)
 
அவனை மருதன் இளநாகனார் பாடியது. (நாஞ்சில் வள்ளுவனை)