புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   919
Zoom In NormalZoom Out

161...
 
தொடுத்த என் நயந்தனை கேண்மதி!
வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே,
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப்
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின்
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப,
வாள் அமர் உழந்த நின் தானையும்,
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே.
 
 
திணை அது; துறை: பரிசில் துறை. (பாடாண்திணை)
 
அவனை    அவர்    பாடிப்   பகடு   பெற்றது.   (குமணனைப்
பெருஞ்சித்திரனார்)
 
162
 
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.
 
 
திணை அது; துறை: பரிசில் விடை. (பாடாண்திணை)
 
அவர்   வெளிமானுழைச்  சென்றார்க்கு  வெளிமான்  துஞ்சுவான்
தம்பியைப்   பரிசில்   கொடு'  என,  அவன்  சிறிது  கொடுப்பக்
கொள்ளாது  போய்,  குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக்
கொணர்ந்து  நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,
அவர் சொல்லியது. (பெருஞ்சித்திரனார்)
 
163
 
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி - மனை கிழவோயே! -
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே.
 
 
திணை அது; துறை: பரிசில். (பாடாண்திணை)
 
பெருஞ்சித்திரனார்   குமணனைப்  பாடிப்  பரிசில்  கொணர்ந்து
மனையோட்குச் சொல்லியது.
 
164
 
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்