| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 925 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
175 | எந்தை! வாழி; ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே; நின் யான் மறப்பின், மறக்கும் காலை, என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், என் யான் மறப்பின், மறக்குவென் - வென் வேல் விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர் திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறை வாய் நிலைஇய மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும் பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே. |
|
திணை: பாடாண்திணை; துறை: இயன்மொழி. | |
|
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது. | |
| | |
| 176 | ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் கேழல் உழுத இருஞ் சேறு கிளப்பின், யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, காணாது கழிந்த வைகல், காணா வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் - அவன் கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) | |
|
ஓய்மான் நல்லியக்கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. | |
| 177 | ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடுநகர், வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி, பாடிப் பெற்ற பொன் அணி யானை, தமர் எனின், யாவரும் புகுப; அமர் எனின், திங்களும் நுழையா எந்திரப் படு புழை, கள் மாறு நீட்ட நணி நணி இருந்த குறும் பல் குறும்பின் ததும்ப வைகி, புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் தீம் புளிக் களாவொடு துடரி முனையின், மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி, கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும், பெரும் பியர் ஆதி, பிணங்கு அரில் குட நாட்டு, எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப் பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை, வருநர்க்கு வரையாது தருவனர் |