புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   926
Zoom In NormalZoom Out

177...
 
சொரிய,
இரும் பனங் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே. 
 
திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) 

மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
 

178
 
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து
கால் இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று,
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன்
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும் காலை,
ஏமமாகத் தான் முந்துறுமே. 
 
திணை: வாகை; துறை: வல்லாண்முல்லை. 

பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது. (ஆவூர் மூலங்கிழார்).
 

179...
 
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென,
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்? என வினவலின், மலைந்தோர்,
விசி பிணி முரசமொடு மண் பல தந்த
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து,
தோலா நல் இசை, நாலை கிழவன்
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த்
திருந்து வேல் நாகற் கூறினர், பலரே. 
 
திணையும் துறையும் அவை. (வாகை, வல்லாண்முல்லை) 

நாலைகிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது.
 

180
 
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே;
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து,
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி,
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து,
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? - முது வாய் இரவல! -
யாம் தன் இரக்கும் காலை, தான் எம்
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க்
கருங் கைக் கொல்லனை இரக்கும்,
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே. 
 
திணையும் துறையும் அவை; துறை: பாணாற்றுப் படையும் ஆம். 

(வாகை, வல்லான்முல்லை) ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக்
கோனாட்டு  எறிச்சிலூர் மாடலன்  மதுரைக் குமரனார் பாடியது.