புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   929
Zoom In NormalZoom Out

190... நோக்கி, வளை கதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம்
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள்,
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து,
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ! 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) சோழன் நல்லுருத்திரன் பாட்டு. 

191 'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே. 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) கோப்பெருஞ்சோழன்  வடக்கிருந்தானுழைச் சென்ற 

பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு 

இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் பாடியது. 

192 யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) கணியன் பூங்குன்றனார் பாட்டு. 

193 அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும் மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், பொருண்மொழிக்
காஞ்சி) ஓரேருழவர் (ஓர் ஏர் உழவர்) பாடியது. 

194 ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூஅணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன்