புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   930
Zoom In NormalZoom Out

194...
 
மன்ற, அப்பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
 
 
திணை: அது; துறை: பெருங்காஞ்சி. (பொதுவியல், பொருண்மொழிக்
 
காஞ்சி) பக்குடுக்கை நன்கணியார் பாடியது.
 
195
 
பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல் ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
 
 
திணை   அது;   துறை:  பொருண்மொழிக் காஞ்சி. (பொதுவியல்)
 
நரிவெரூஉத்தலையார் பாடியது.
 
196
 
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை;
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
நோய் இலராக நின் புதல்வர்; யானும்,
வெயில் என முனியேன், பனி என மடியேன்,
கல் குயின்றன்ன என் நல்கூர் வளிமறை,
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு மகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே!
 
 
திணை: பாடாண்திணை; துறை:   பரிசில்கடாநிலை.  பாண்டியன்
 
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை
 
ஆவூர் மூலங்கிழார் பாடியது.
 
197
 
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண் வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,