| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 931 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 197... | சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; நல் அறிவு உடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் கடாநிலை) சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது. | |
| 198 | 'அருவி தாழ்ந்த பெரு வரை போல ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா, கடவுள் சான்ற கற்பின், சேயிழை மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி, திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி, காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம், வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த தண் தமிழ் வரைப்பகம் கொண்டியாக, பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல் நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும், ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும் பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின் முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்! யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப் பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும், நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும், இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, நீடு வாழிய! நெடுந்தகை! யானும் கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும், துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின் அடி நிழல் பழகிய அடியுறை; கடுமான் மாற! மறவாதீமே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் கடாநிலை) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடியது. | |
| 199 | கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்; அனையர் வாழியோ இரவலர்; அவரைப் புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் உடைமை ஆகும், அவர் உடைமை; அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, பரிசில் கடாநிலை) பெரும்பதுமனார் பாட்டு. |