புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   938
Zoom In NormalZoom Out

213...
 
துப்பொடு நிற் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்,
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே?
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின்தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால், நன்றே - வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே.
 
 
திணை: வஞ்சி; துறை: துணைவஞ்சி. அவன் மக்கள் மேல்
 
சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.
 
214
 
'செய்குவம் கொல்லோ, நல்வினை?' எனவே
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.
 
 
திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி.
 
அவன் வடக்கிருந்தபோது கூறியது.
 
 
 
215
 
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.
 
 
திணை: பாடாண் திணை;