|
230... சமொடு நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், வீழ் குடி உழவன் வித்து உண்டா அங்கு ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், நேரார் பல் உயிர் பருகி, ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.
திணை அது; துறை: கையறு நிலை. (பொதுவியல்)
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார்
பாடியது.
231 எறி புனக் குறவன் குறையல் அன்ன கரி புற விறகின் ஈம ஒள் அழல் குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, விசும்புற நீளினும் நீள்க - பசுங்கதிர்த் திங்கள் அன்ன வெண்குடை ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
232 இல்லாகியரோ, காலை மாலை! அல்லாகியர், யான் வாழும் நாளே! நடுகல் பீலி சூட்டி, நார் அரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ - கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
அவனை அவர் பாடியது. (அதியமான்
நெடுமான் அஞ்சியை
ஒளவையார் பாடியது.)
233 பொய்யாகியரோ! பொய்யாகியரோ! பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர் கெழு நோன்தாள் அகுதைகண் தோன்றிய பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! - 'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், போர் அடு தானை, எவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பல' என வைகுறு விடியல், இயம்பிய குரலே.
திணயும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
234 நோகோ யானே? தேய்கமா காலை! பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி, தன் அமர் காதலி புல் மேல் வைத்த இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல் - உலகு புகத் திறந்த வாயில் பலரொடு உண்டல் மரீஇயோனே?
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
அவனை அவர் பாடியது. (வேள் எவ்வியை
வெள்ளெருக்கிலையார் பாடியது.)
235 சிறிய கட் பெறினே,
|