|
239...களிறு ஊர்ந்தனன்; தீம் செறி தசும்பு தொலைச்சினன்; பாண் உவப்பப் பசி தீர்த்தனன்; மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! படு வழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே!
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
240 ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், வாடா யாணர் நாடும் ஊரும் பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் கோடு ஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு, காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, மொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, 'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, ஒள் எரி றைப்ப உடம்பு மாய்ந்தது; புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் வாடிய பசியராகி, பிறர் நாடு படு செலவினர் ஆயினர், இனியே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
241 'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார், அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி வச்சிரத் தடக்கை நெடியோள் கோயிலுள், போர்ப்புறு முரசம் கறங்க, ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
அவனை உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் பாடியது.
242 இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்; நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி, பாணன் சூடான்; பாடினி அணியாள்; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல் வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற்
கீரத்தனார் பாடியது.
243 இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல் செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி, மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து, நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக, கரையவர் மருள, திரையகம் பிதிர, நெடு
|