புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   954
Zoom In NormalZoom Out

274...
 
தகை மறவன்
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே,
தன்னும் துரக்குவன் போலும் - ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர,
கையின் வாங்கி தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே! 
 
திணை அது; துறை: எருமை மறம். (தும்பை)
 
உலோச்சனார் பாடியது.
 
275
 
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன்
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி,
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது,
தொடர்கொள் யானையின் குடர் கால் தட்ப,
கன்று அமர் கறவை மான,
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே. 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, எருமை மறம்)
 
ஒரூஉத்தனார் பாடியது.
 
276
 
நறுவிரை துறந்த நரை வெண் கூந்தல்,
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை,
செம் முது பெண்டின் காதல்அம் சிறாஅன்,
மடப்பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த
குடப் பால் சில் உறை போல,
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே. 
 
திணை: அது; துறை: தானை நிலை.
 
மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது.
 
277
 
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. 
 
திணை அது; துறை: உவகைக் கலுழ்ச்சி. (தும்பை)
 
பூங்கண் உத்திரையார் பாடியது.
 
278
 
'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
கொண்ட