புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   957
Zoom In NormalZoom Out

285...
 
மூடையின்......................
வாடிய மாலை மலைந்த சென்னியின்;
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த
மூரி வெண் தோல் . . . . . . .
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ!
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே;
அது கண்டு, பரந்தோர் எல்லாம் - புகழத் தலை பணிந்து
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர்
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய,
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே. 
 
திணை: வாகை; துறை: ..........முல்லை.

அரிசில் கிழார் பாடியது.
 

286
 
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓர் அன்ன இளையர் இருப்ப,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி,
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே! 
 
திணை: கரந்தை; துறை: வேத்தியல். 

ஒளவையார் பாடியது.
 

287
 
துடி எறியும் புலைய!
எறி கோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்,
வயற் கெண்டையின் வேல் பிறழினும்,
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும்,
தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! 
 
திணை: கரந்தை; துறை: நீண்மொழி. 

சாத்தந்தையார் பாடியது.
 

288
 
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க,
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை ...................................... மன்ற
குருதியொடு துயல்வரு மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. 
 
திணை: தும்பை; துறை: மூதில் முல்லை. 

கழாத்தலையார் பாடியது.