புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   966
Zoom In NormalZoom Out

320...
 
மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தென,
பார்வை மடப்பிணை தழீஇ, பிறிது ஓர்
தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல்வழங்காமையின், கல்லென ஒலித்து,
மான் அதட் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆரநெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
தங்கினை சென்மோ, பாண! - தங்காது,
வேந்து தரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.
 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை)
 
வீரை வெளியனார் பாடியது.
 
 
 
321
 
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீம்கோள் வெள்எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன்
வேனில் கோங்கின் பூம்பொருட்டு அன்ன
குடந்தைஅம் செவிய கோட்டு எலி ஆட்ட,
கலிஆர் வரகின் பறங்குபீள் ஒளிக்கும்,
வன்புல வைப்பினதுவே - சென்று
தின்பழம் பசீஇ ..........னனோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே.
 
 
திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை)
 
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
 
 
 
322
 
உழுதுஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவைமுட் கள்ளிப் பொரிஅரைப் பொருந்தி,
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்எடுத்து ஆர்ப்பின்,
பெருங்கட் குறுமுயல் கருங்கலன் உடைய
மன்றில் பாயும் வன்புலத்ததுவே -
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண்பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா