புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   969
Zoom In NormalZoom Out

329...
 
கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று
அரவுஉறை புற்றத்து அற்றே - நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே. 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை) 

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.
 

330
 
வேந்துடைத் தானை முனைகெட நெரிதர,
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகி,
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ - என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மையோனே. 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை) 

மதுரைக் கணக்காயனார் பாடியது.
 

331
 
கல் அறுத்து இயற்றிய வல்உவர்க் கூவல்,
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி
நனி நல் கூர்ந்தனன்ஆயினும், பனிமிக,
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போல, குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன், உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போல, சிற்சில
வரிசையின் அளிக்கவும் வல்லன் உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே. 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை) 

உறையூர் முது கூத்தனார் பாடியது.
 

332
 
பிறர்வேல் போலாதாகி, இவ் ஊர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புறம் நீறும் ஆடி, கலந்து இடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,
இன்குரல் இரும்பை யாழொடு ததும்ப,
தெண்நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை) 

விரியூர் நக்கனார் பாடியது.