குற்றம் செய்ந்நன்றி
கோறலேயாகலின், அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு,
இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது. தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. ''செய்யாமைச் செய்த உதவி'' என்று பாடம் ஓதி ''மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி'' என்று உரைப்பாரும் உளர். காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.
அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். ''காலத்தினால்'' என்பது
வேற்றுமை மயக்கம். பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |