திருக்குறள்
ஓலை எண் :   86

Zoom In NormalZoom Out

அருள் காரணம்  என்பதாயிற்று. பொருள் அற்றார்  பூப்பர்  ஒருகால்
அருள்அற்றார்  அற்றார்மற்  றாதல்  அரிது.  ஊழான் வறியராயினார்
அது  நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அவ்வாறு
அன்றி   அருளிலாதார்   பாவம்  அறாமையின்  அழிந்தாரே;  பின்
ஒருகாலத்தும்  ஆதல்  இல்லை.  ''மற்று'' வினைமாற்றின்கண் வந்தது,
மேல்   பொருள்  இன்மையொடு  ஒருவாற்றான்  ஒப்புமை  கூறினார்
ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது
கூறியவாறு.   தெருளாதான்   மெய்ப்பொருள்   கண்டற்றால்  தேரின்
அருளாதான்  செய்யும் அறம். உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன்
செய்யும்   அறத்தை   ஆராயின்,   ஞானம்  இல்லாதவன்  ஒருகால்
மெய்ப்பொருளை    உணர்ந்தாற்    போலும்.   மெய்ப்பொருள்   -
மெய்ந்நூலில்  சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன்
இடையே   மெய்ப்பொருளை   உணர்ந்தால்  அதனைத்  தன்ஞானம்
இலாமையால்  தானே   அழித்துவிடும்:  அது   போல  அருளாதான்
இடையே  அறஞ்செய்தால்  அதனைத்  தன்  அருளாமையால் தானே
அழித்து  விடும்  என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம்
அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும்
அத்துணை  இல்லாதார்க்கு  வரும் குற்றம் கூறப்பட்டது. வலியார்முன்
தன்னை  நினைக்கதான்  தன்னின் மெலியார்மேல்  செல்லும் இடத்து.
தன்னின்  வலியார்  தன்னை  நலிய வரும்பொழுது அவர்முன் தான்
அஞ்சிநிற்கும்  நிலையினை  நினைக்க,  அருளில்லாதவன்  தன்னின்
எளியார்மேல்  தான்  நலியச்  செல்லும்  பொழுது. ''மெலியார்'' எனச்
சிறப்புடைய     உயர்திணைமேல்     கூறினாராயினும்,     ஏனைய
அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும்
அவ்வாறே   அச்சம்  ஆம்  என்று  அறிந்து,  அதன்மேல்  அருள்
உடையன்   ஆம்  என்பது  கருத்து.  இதனால்  அருள்  பிறத்தற்கு
உபாயம் கூறப்பட்டது. அஃதாவது, ஊன் உண்டலை ஒழிதல்.