கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண். அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம்,
அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம்.
காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின்
நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை,
நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், ''இடத்தால்'' என்றார். ''விடாது''
என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள்
உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும்,
கெடுபொருள் நட்டார்வாயினும்,
ஒரோவழிக் கேட்கப்படுதலான், ''எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்'' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. ''வாய்''
என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை
உணர்த்திநின்றது. மெய்யாதல், நிலைபெறுதல். சொல்வாரது
இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் |