பொருள் செயல் வகை
இனிப் பெரும்பான்மையும் நாட்டானும் அரணானும் ஆக்கவும் காக்கவும் படுவதாய பொருளைச் செய்தலின் திறம் இவ்வதிகாரத்தாற் கூறுகின்றார். பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்ல தில்லை பொருள். ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய
வல்ல பொருளையொழிய; ஒருவனுக்குப் பொருளாவதில்லை. மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.
இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்;எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து
நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், ''யாவரும்'' என்றார்.
பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக்
கெடுக்கும். எல்லார்க்கும்
எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. ''பொய்யா விளக்கம்'' என்றும், ஏனைய விளக்கோடு
இதனிடை வேற்றுமை தோன்ற ''எண்ணிய தேயத்துச்
சென்று'' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். |