அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ''நாண'' என்னும் வினையெச்சம் ''ஒல்வது'' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. ''கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது''? என்பதாம். தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும் இவ் வூர். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது. உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ''நம்கண் காதல் உடைமையின் மறார்'' என்பது தோன்றக் ''காதலர்'' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம். களவியல் முற்றும் இனி, கற்புப் பதினெட்டு அதிகாரத்தால் கூறுவான்தொடங்கி, முதற்கண் பிரிவு ஆற்றாமை கூறுகின்றார். அஃதாவது, வரைந்தெய்கிய பின் தலைமகன் அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுச் சேயிடையினும் ஆயிடையினும் தலைமகளைப் பிரிந்து செல்லும்; செல்லும் ஞான்று அப்பிரிவினை அவள் ஆற்றாளாம்தன்மை. அஃது ஈண்டுப் பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி கூறலும், அவள் தனக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பான உணர்ந்து கூறலும் ,பிரிவணர்த்தியவழிக் கூறலும், தலைமகன் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறலும் என நால்வகையால் கூறப்படும். செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். |