வுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் ''நயந்தவர்'' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் ''நல்காமை'' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் ''பசந்த என் பண்பு'' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் ''யார்க்கு உரைக்கோ'' என்றும் கூறினாள். அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. யான் ஆற்றியுளேனாகவும் இப்பசப்புத்தான்; என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ''குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல'' சீவக.விமலை.
1 என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. ''அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா'' என்பதாம். சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. ''அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்'', என்ற தோழிக்குச் சொல்லியது. பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார். எதிர் நிரல் நிறை. ''அடக்குந்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா'', என்பதாம். உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. ''பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர''், என்ற வழிச் சொல்லியது. அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்த |