போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ''என்பார்'' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின். பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். இதுவும் அது. இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். ''பட்டாங்காக'' என ஆக்கம் விரித்து உரைக்க. ''முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்''? என்பதுபட நின்றமையின், ''மன்'' ஒழியிசைக்கண் வந்தது. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது. அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ''நட்டார்'' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது ''இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது'' என்பதாம். அது, தனியாகிய படர் மிகுதி என விரியும். அஃதாவது, படர் மிகுதி தலைவன்கண் இன்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல். அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின், அவன்கண் இல்லையாயிற்று. இது, பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின், பசப்புறு பருவரலின் பின் வைக்கப்பட்டது. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. ''காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி'', என்ற தோழிக்குச் சொல்லியது. தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் |