ஓகாரம் பிரிநிலை நிறைஉடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறைஇறந்து மன்று படும். இதுவும் அது. இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, பலரும் அறிதல். ''இனித் தன் வரைத்து அன்று'' என்பதாம். செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று. நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோயினை
உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று. இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் ''செற்றார்'' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். ''நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று'' என்பதாம். செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். இதுவும் அது. என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. ''வேண்ட'' என்பது, ''வேண்டி'' எனத் திரிந்து நின்றது. ''அளித்து'' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. ''இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது'' என்பதாம். நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் ''நீ புலவாமைக்குக் காரணம் யாது?'' என்ற தோழிக்குச் சொல்லியது. நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ''பேணியார்'' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். |