ஊடற்கண் தலைமகன் சொல்லியது. ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; வேறு துணையாவார் ஒருவரும் இல்லை ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். ''ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது'', என்பதாம். தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய நெஞ்சம் தமர்அல் வழி. இதுவும் அது. தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ''பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது'', என்பதாம். அஃதாவது, இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரோடு ஒருவர் புலத்தல். அதிகார முறையையும் இதனானே விளங்கும் . புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில்
நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது. அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல்
நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை
மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். ''சிறிது'' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. ''புலத்தை'' என்புழி ஐகாரம் ''கடம்பூண்டொருகால் நீ வந்தை'' கலித்.குறிஞ்சி.27 என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. ''புலத்தி'' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, ''நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்'' என நகையாடி நேர்வித்தவாறு. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது. |