| மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை திண்ணிதில் திருகித் தீஅழல் பொத்திக் காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் ஆங்ஙனம் அன்றியும் ஆயிழை கேளாய் ஈங்குஇம் மாதவர் உறைவிடம் புகுந்தேன் மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து மாபெருந் துன்பம் கொண்டுஉளம் மயங்கிக் காதலன் உற்ற கடுந்துயர் கூறப் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிகென்று அருளி ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி உய்வகை இவைகொள்என்று உரவோன் அருளினன் மைத்தடங் கண்ணார் தமக்கும்என் பயந்த சித்திரா பதிக்கும் செப்பு நீஎன, ஆங்குஅவள் உரைகேட்டு் அரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்துஎன். ஊரலருரைத்த காதை முற்றிற்று. |