| திருவிழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் எடுத்தனன் என்கொணடு் எழுந்தனன் விசும்பில் படுத்தனன் ஆங்குஅவன் பான்மையேன் ஆயினேன் ஆங்குஅவன் ஈங்குஎனை அகன்றுகண் மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும் மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான் தனித்துஅலர் கொய்யும் தகைமையள் அல்லள் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந் திகையின் எயில்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குஉளர். விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள் மண்ணவர் விழையார் வானவர் அல்லது பாடுவண்டு இமிரா பல்மரம் யாவையும் வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்என்று உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார் வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த சம்பாதி இருந்த சம்பாதி வனமும் தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் மூப்புடை முதுமைய தாக்குஅணங்கு உடைய யாப்புடைத்து ஆக அறிந்தோர் எய்தார் அருளும் அன்பும் ஆர்உயிர் ஓம்பும் ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும் உவவனம் என்பதுஒன்று உண்டு அதன் உள் |