| கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என உண்ணா நோன்பி தன்னொடும் சூள்உற்று உண்ம்என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும் கணவிரி மாலையில் கட்டிய திரள்புயன் குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன் சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன் வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உரீஇப் பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்தாங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி நீடலும் நீடும் நிழலொடு மறலும் மையல் உற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டுநிற் குநரும் சுரியல் தாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை ஒள்அரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல் காந்தள்அம் செங்கை ஏந்துஇள வனமுலை அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய பேடிக் கோலத்துப் |