| நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்புஉரைக் கும்கொல் மாதவர் உறைவிடம் ஒரீஇமணி மேகலை தானே தமியள்இங்கு எய்தியது உரைஎனப், பொதிஅறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தி மதுமலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும் இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ? அனையது ஆயினும் யான்ஒன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது புனைவன நீங்கில் புலால்புறத்து இடுவது மூப்புவிளிவு உடையது தீப்பிணி இருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றஅடங்கு அரவின் செற்றச் சேக்கை. அவலக் கவனா கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் என்று அவள் உரைத்த இசைபடு தீஞ்சொல் சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்ப் பளிங்குபுறத்து எறிந்த பவளப் பாவையின் இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்என். இளங்கோன் கண்ட இளம்பொன் பூங்கொடி விளங்குஒளி மேனி விண்ணவர் வியப்பப் பொருமுகப் |