| புகத் திறந்த பகுவாய் வாயில் உலக அறவியின் ஒருபுடை இருத்தலும் கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவத் திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் இரவி வன்மன் ஒருபெரு மகளே துரகத் தானைத் துச்சயன் தேவி தயங்குஇணர்க் கோதைத் தாரை சாவுற மயங்கி யானைமுன் மன்உயிர் நீத்தோய் காராளர் சண்பையில் கௌசிகன் மகளே மாருத வேகனோடு இந்நகர் புகுந்து தாரை தவ்வை தன்னொடு கூடிய வீரை ஆகிய சுதமதி கேளாய் இன்றுஏழ் நாளில் இடையிருள் யாமத்துத் தன்பிறப் பதனொடு நின்பிறப்பு உணர்ந்துஈங்கு இலக்குமி யாகிய நினக்குஇளை யாள்வரும் அஞ்சல்என்று உரைத்த அவ்வுரை கேட்டு நெஞ்சம் நடுக்குறூஉம் நேர்இழை நல்லாள் காவ லாளர் கண்துயில் கொள்ளத் தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப வலம்புரிச் சங்கம் வறிதுஎழுந்து ஆர்ப்பப் புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப் புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப் பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப் பணைநிலைப் புரவி பலஎழுந்து ஆலப் பணைநிலைப் புள்ளும் பலஎழுந்து ஆலப் பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்பப் |