மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   43
Zoom In NormalZoom Out

கநல் நாட்டு நானூறு யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகேடு எய்தும்
இதன்பால் ஒழிகென இருநில வேந்தனும்
மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டுகழிக என்றே
பறையில் சாற்றி நிறைஅருந் தானையோடு
இடவயம் என்னும் இரும்பதி நீங்கி
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்
காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரைச்
சேய்உயர் பூம்பொழில் பாடிசெய்து இருப்ப
எங்கோன் நீஆங்கு உரைத்தஅந் நாளிடைத்
தங்காது அந்நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள்அறு புலவநின் மலர்அடி அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய
அருள்அறம் பூண்ட ஒருபேர் இன்பத்து
உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள்
அரவக் கடல்ஒலி அசோதரம் ஆளும்
இரவி வன்மன் ஒருபெருந் தேவி
அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று
இலக்குமி என்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன்
அத்தி பதிஎனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீல பதிஎனும் நேர்இழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
பராஅரு மரபின்நின் பாதம் பணிதலும்,
எட்டுஇரு நாளில்இவ் இராகுலன் தன்னைத்
திட்டி விடம்உணும் செல்உயிர் போனால்
தீஅழல் அவனொடு சேயிழை மூழ்குவை;
ஏது நிகழ்ச்சி ஈங்குஇன்று ஆகலின்