| கவேரக் கன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப்பு எய்துதி; அணியிழை நினக்குஓர் அருந்துயர் வருநாள் மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி அன்றுஅப் பதியில் ஆர்இருள் எடுத்துத் தென்திசை மருங்கில்ஓர் தீவிடை வைத்தலும் வேக வெந்திறல் நாகநாட்டு அரசர் சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்துஆங்கு அறச்செவி திறந்து மறச்செவி அடைத்துப் பிறவிப்பிணி மருத்துவன் இருந்துஅறம் உரைக்கும் திருந்துஒளி ஆசனம் சென்றுகை தொழுதி; அன்றைப் பகலே உன்பிறப்பு உணர்ந்துஈங்கு இன்றுயான் உரைத்த உரைதெளி வாய்எனச் சாதுயர் கேட்டுத் தளர்ந்துஉகு மனத்தேன் காதலன் பிறப்பும் காட்டா யோஎன ஆங்குஉனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம் பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்குஇவன் என்னும் என்றுஎடுத்து ஓதினை ஆங்குஅத் தெய்வதம் வாரா தோஎன ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான்என் பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை முற்றிற்று. |