| கேட்குவன் நின்னது தன்மைஅந் நெடுநிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையில் துணிந்தனை அன்றோ தவநெறி அறவணன் சாற்றக் கேட்டனன் ஆங்குஅவன் தானும்நின் அறத்திற்கு ஏதுப் பூங்கொடி கச்சி மாநகர் ஆதலின் மற்றுஅம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொன்தொடி தாயபதிப் படர்ந்தனர் அன்னதை அன்றியும் அணியிழை கேளாய் பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின் அந்நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந்நகர் எய்தினர் காணாய் ஆர்உயிர் மருந்தே! அந்நாட்டு அகவயின் கார்எனத் தோன்றிக் காத்தல்நின் கடன்என அருந்தவன் அருள ஆயிழை வணங்கித் திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்திக் கொடிமதில் மூதூர்க் குடக்கண்நின்று ஓங்கி வடதிசை மருங்கின் வானத்து இயங்கித் தேவர் கோமான் காவல் மாநகர் மண்மிசைக் கிடந்தென வளம்தலை மயங்கிய பொன்நகர் வறிதாப் புல்என்று ஆயது கண்டுஉளம் கசிந்த ஒண்தொடி நங்கை பொன்கொடி மூதூர்ப் புரிசை வலம்கொண்டு நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து தொடுகழல் கிள்ளி துணைஇளங் கிள்ளி செம்பொன் மாச் |